Publish Date: Mon, 24 Nov 2008 (12:31 IST)
Updated Date: Mon, 24 Nov 2008 (12:31 IST)
சூரியனிற்கு விண்கலம் அனுப்பும் திட்டம் எதுவும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் (இஸ்ரோ) இல்லை என்று அதன் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் சூரியனைத் தொலைவில் இருந்து ஆராயும் வகையில் செயற்கைக்கோள் ஒன்று அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நடந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மகாராணி சேது லட்சுமிபாயின் 113ஆவது பிறந்த நாள் விழாவில், இந்தியாவின் அண்மைக்கால விண்வெளி சாதனைகள் குறித்துப் பேசிய மாதவன் நாயர், சூரியக் கதிர்வீச்சு குறித்து ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதுதான் "ஆதித்யா" எனப்படும் திட்டம் என்றார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தில், சூரியனிற்கும் பூமிக்கும் இடையில் செயற்கைக்கோள் ஒன்று நிறுத்தப்பட்டு, அதன்மூலம் இரண்டு கோள்களையும் பற்றி ஆய்வு நடத்தப்படும் என்றார் அவர்.
இந்தத் திட்டத்திற்கான பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் திட்டப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பட்பட்டுள்ள சந்திரயான்-1 வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக சந்திரயான் - 2 செயற்கைக்கோள் 2012ஆம் ஆண்டில் அனுப்பப்படும் என்றும், இரண்டாவது சந்திரயான் செயற்கைக்கோளும் ஆளில்லாமலே செலுத்தப்படும் மாதவன் நாயர் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள் மூலம் நிலவில் ரோபோட் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று கூறிய அவர், அந்த ரோபோட் நிலவில் இருந்து மாதிரி துகள்களை எடுத்து, ஆய்வு செய்து அதுபற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார் அவர்.
சந்திரயான் வரிசை முடிந்த பிறகு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டதாகவும் தெரிவித்த அவர், அதற்கான புளூ பிரின்ட்-ஐ நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் எதிர்பார்க்க முடியும் என்றார்.