நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் பயங்கரவாதிகள், நக்சலைட்கள், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க தனி சிறப்புப்படை ஒன்றை அமைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் 2 நாள் மாநாட்டில் இன்று நிறைவுரை ஆற்றிய பிரதமர், புதிதாக அமைக்கப்படும் தனி சிறப்புப் படை, 100 நாட்களில் பயங்கரவாதிகள், நக்சலைட்கள், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்படத் துவங்கும் வகையில் திறமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
தற்போது நாட்டில் நடைபெற்று வரும் மத ரீதியிலான மோதல்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடும். இது தடுக்கப்பட வேண்டும். எனவே குற்றங்களைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும், புதிதாக அமைக்கப்படும் சிறப்புப் படை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் தலைமையில் இயங்க வேண்டும் என்றும், அதற்கு மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.