Publish Date: Sat, 22 Nov 2008 (18:29 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (18:28 IST)
ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு எதிராக நடந்த ஊர்வலத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாயினர்.
பாரமுல்லா மாவட்டத்தில் தேர்தலைக் கண்டித்துப் பேரணி நடத்த முயன்றவர்களை மத்திய ரிசர்வ் காவல் படையினர் தடுத்தபோது, சிலர் காவலர்களின் மீது கற்களை வீசியுள்ளனர்.
இதையடுத்து காவலர்கள் வன்முறையாளர்களின் மீது தடியடி நடத்தினர். ஆனால் அதற்கு வன்முறை கட்டுப்படாததால் முதலில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சும் பின்னர் வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது என்று காவல் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
வேட்பாளர் ஒருவருக்குப் பாதுகாப்பளித்த காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடில் மன்சூர் அகமது குமார் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து இறந்த இளைஞரின் உடலை எடுத்துக்கொண்டு வன்முறையாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மீண்டும் வன்முறை வெடித்தது. அதைக் கட்டுப்படுத்த காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதில் தன்வீர் அகமது ஷேக் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
நீதி விசாரணைக்கு உத்தரவு!
இதற்கிடையில் பாரமுல்லா துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாரமுல்லா மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் முகமது அக்பர் மிர் விசாரணை அதிகாரியாக இருப்பார் என்றும், ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அரசு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.