Publish Date: Sat, 22 Nov 2008 (02:18 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (02:18 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவியை காவலர்கள் துன்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் குறித்து விசாரிக்கப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியிடம் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியுள்ளார்!
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் துறவி சாத்வி பிரக்ஞா சிங் தாகூர், மராட்டிய பயங்கரவாதத் தடுப்பு பிரிவு காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார் என்று எல்.கே. அத்வானி குற்றம்சாற்றியிருந்தார்.
மேலும், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில், இந்து மதத் தலைவர்களைக் குறிவைத்து காவலர்கள் கைது செய்து வருவதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களைத் துன்புறுத்தி வாக்குமூலங்களை பெறுவதாகவும் அத்வானி கூறியிருந்தார்.
இதையடுத்து எல்.கே. அத்வானியிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் எந்த முறைகேடும் இல்லை என்றும், வழக்கு விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தங்களைச் சந்தித்து விளக்குவார் என்றும் உறுதியளித்தார்.
இந்நிலையில் எல்.கே. அத்வானியை எம்.கே. நாராயணன் நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது, மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை குறித்து அத்வானிக்கு விளக்கியதாகவும், பெண் துறவி சாத்வி பிரக்ஞா, பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவலர்களால் துன்புறுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அத்வானியிடம் எம்.கே. நாராயணன் உறுதியளித்துள்ளார்.
Webdunia
Publish Date: Sat, 22 Nov 2008 (02:18 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (02:18 IST)