மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மும்பையில் உள்ள மராட்டிய மாநில அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டு வெடிப்பைச் சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியதாக அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த துறவி சாத்வி பிரக்யா தாகூர், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், மற்றொரு சாமியாரான தயானந்த பாண்டே உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளதால் இவர்களை மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மஹராஷ்டர அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தங்கள் வசதிக்காக மும்பையில் உள்ள MCOCA நீதிமன்றத்திற்கு மாற்றித்தர வேண்டும் என்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கோரிக்கை வைத்தது.
இதற்கு எதிர்த் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நாசிக் மாவட்டத்திலேயே இரண்டு MCOCA நீதிமன்றங்கள் இருக்கையில் இந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எச்.கே கன்ட்ரா இந்த வழக்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கேட்டபடி மும்பைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் தரப்பு வழக்கறிஞர் உமேஷ் வல்சேட், நாசிக் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்தார்.