மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை மராட்டிய மாநிலத்தின் அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விசாரிக்க அம்மாநில காவல்துறை அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியதாக அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த துறவி பிரக்யான் சிங் தாக்கூர், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித், மற்றொரு சாமியாரான தயானந்த பாண்டே உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு அமைப்பை உருவாக்கி சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளதால் இவர்களை மராட்டிய மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மஹராஷ்டர அமைப்பு ரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (Maharashtra Control of Organised Crime Act -MCOCA) கீழ் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று அம்மாநில காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மாநில அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு (பொடா) பதிலாக மராட்டிய மாநில அரசு நிறைவேற்றிய இச்சட்டம், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செய்யப்படும் கடும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கோடு நிறைவேற்றபட்டதாகும்.
1999ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் எவரும் 6 மாதங்களுக்கு பிணைய விடுதலைப் பெற முடியாது என்பது மட்டுமின்றி, இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுக் கால சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மும்பையில் தொடர்ந்து நடந்துவந்த நிழல் உலக தாதாக்களின் நடவடிக்கைகளை முற்றிலுமாக ஒடுக்கவே இந்தச் சட்டம் முதலில் கொண்டுவரப்பட்டதென்று அதனை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த அரசு பொது வழக்கறிஞர் ரொஹினி ஷாலினி கூறியுள்ளார்.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நிழல் உலக தாதாக்களின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டதற்குப் பிறகு இச்சட்டத்தைக் கொண்டே அம்மாநில அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தி வருகிறது.