வர்த்தக முத்திரை (டிரேட் மார்க்) வரைவு 2007-ல் சில திருத்தங்கள் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த விவரம் வருமாறு :
மத்திய வர்த்தக அமைச்சகத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகளின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பு நாடுகளில் இந்திய வர்த்தக முத்திரைக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதோடு, அந்த உறுப்பு நாடுகளின் வர்த்தக முத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக முத்திரை உரிமம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறுவதை ஊக்குவிப்பதோடு கிளைகள் அமைக்கவும் ஊக்கமளிக்கப்படுகிறது. தவிர உலகளவில் இந்திய ஐபிஆர் முறையில் ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகை கிடைக்கிறது.
கடந்த 2007, பிப்ரவரி 8-ம் தேதி, டிரேட் மார்க் (திருத்தம்) மசோதா 2007-க்கு அமைச்சரவை அனுமதி அளித்தது. இதன்படி 2007 ஆகஸ்ட் 23 அன்று இந்த வரைவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2007 அக்டோபர் 1 அன்று வர்த்தக அமைச்சகத்தின் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கும் இந்த வரைவு அனுப்பப்பட்டது.
2008, மார்ச் 19 அன்று நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்தது. இந்த வரைவில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் மற்றும் நோக்கங்களை நிலைக்குழு பொதுவாக ஏற்றுக் கொண்டதோடு வரைவின் அனைத்து பிரிவுகளையும் ஒத்துக் கொண்டது.