சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு இன்று நடந்த இறுதிகட்டத் தேர்தலில் 61 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன!
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கு கடந்த 14 ஆம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 8 மாவட்டங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கும் இன்று இறுதிகட்டத் தேர்தல் நடைபெற்றது. 88,14,228 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதிகளுக்கு 687 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ராய்கர், கோர்பா மற்றும் ஜாஷ்பூரில் தலா 65 விழுக்காடு வாக்குகளும், ராய்பூர் மாவட்டத்தில் 60 விழுக்காடு வாக்குகளும், பிலாஸ்பூரில் 62 விழுக்காடும், சர்குஜா 60 விழுக்காடும், கோரியாவில் 55 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, அவரின் மனைவி ரேணு ஜோகி, பா.ஜ.க. மாநில தலைவர் விஷ்ணுதேவ் சாய், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தனேந்திர சாகு, பேரவைத் துணைத் தலைவர் பத்ரிதர் திவான், உள்துறை அமைச்சர் ராம்விசார் நேடாம் ஆகியோர் இன்று நடந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.