பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பயங்கரவாதிகளுடன் சமரசம் செய்துகொள்ளப்பட்டதால்தான் நமது நாட்டில் பயங்கரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி குற்றம்சாற்றினார்.
மத்தியப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டித் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, "கந்தஹார் விமானக் கடத்தலின்போது பயணிகளை விடுவிப்பதற்காகப் முக்கியமான பயங்கரவாதிகளை தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு விடுதலை செய்துவிட்டது. அதனால்தான் பயங்கரவாதம் வளர்ந்துள்ளது" என்றார்.
பயங்கரவாதிகளுடன் சமரசம் செய்துகொண்டவர்களுக்கு பயங்கரவாத விடயத்தில் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது அடிப்படையற்ற குற்றச்சாற்றுக்களை சுமத்த எந்த உரிமையும் இல்லை என்றார் அவர்.
பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று குற்றம்சாற்றிய ராகுல், தண்ணீர், சாலைகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதையும் பா.ஜ.க. பூர்த்தி செய்யவில்லை என்றார்.
காங்கிரசால் மட்டுமே வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பதால் காங்கிரசிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.