நமது ரூபாய் நோட்டுக்கள் தயாராகும் அரசு அச்சகம் உள்ள நாசிக் நகரத்தில் செல்பேசிக் கடை ஒன்றில் இருந்து ரூ.18 லட்சத்து 800 மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரகசியத் தகவலின்பேரில் நாசிக் நகரக் காவல் துறையினர் நேற்று நள்ளிரவு நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், கடந்த வாரம் புதிதாகத் திறக்கப்பட்ட 'Mobile World' என்ற செல்பேசிக் கடையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்தக் கடையின் உரிமையாளர் சஞ்சய் வர்மா, அவரின் நண்பர் பிரமோத் தாக்கரே, கடை ஊழியர்கள் சுதாகர் பாண்டே, குப்தா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுதாகர் பாண்டே மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளனர்.
சுதாகரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு இன்று மீண்டும் அதே கடையில் கார் நிறுத்துமிடம் அருகில் இருந்து 8 லட்சத்து 800 மதிப்புள்ள கள்ள நோட்டுக்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில் சஞ்சய் வர்மா, பிரமோத் தாக்கரே ஆகியோர் ஏற்கெனவே வங்கி மோசடி ஒன்றில் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.