ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மாவட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
சம்பா மாவட்டத்தில் ராம்கார்க் வட்டத்தில் சர்வதேச எல்லைக் கோட்டை நோக்கி இரண்டு மர்ம நபர்கன் சந்தேகத்திற்கு உரிய வகையில் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் அவர்களை நிற்கும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றதால், அவர்களை விரட்டிச் சென்று கைது செய்ததாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்களின் விவரம் வங்காள தேசத்தைச் சேர்ந்த சாதிக் மியான், அப்துல் மாலிக் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து அமெரிக்க டாலர்கள் 175, இந்திய ரூபாய் 4,300 மற்றும் சில வங்காள தேச நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவர்கள் இருவரும் மேல் விசாரணைக்காகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.