அமைதி, மேம்பாடு, அணு ஆயுத ஒழிப்பு ஆகிய விடயங்களில் ஆற்றியுள்ள அளப்பரிய பணிகளுக்காக சர்வதேச அணு சக்தி முகமையின் தலைமை இயக்குநர் முகமது எல் பராடி, 2008 ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தலைநகர் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் "அணு சக்தியை ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்த்தல், பல ஆண்டுகளுக்கு பயன்படுமாறு அணு சக்தியை ஆக்கபூர்வமான தேவைகளுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரித்தல்" ஆகிய முயற்சிகளுக்காக முகமது எல் பராடியை கெளரவப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திரா காந்தி அமைதி விருதை வழங்கும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், "வியன்னாவில் உள்ள சர்வதேச அணு சக்தி முகமையின் தலைமை இயக்குநர் என்ற அடிப்படையில், சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றில் டாக்டர் முகமது எல் பராடி வெளிப்படையான போக்கை கடைபிடித்து வந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியா சர்வதேச அளவில் அணு சக்தி வர்த்தகத்தில் மீண்டும் நுழைவதற்கு அவசியமான, கண்காணிப்பு ஒப்பந்தத்தில் சர்வதேச அணு சக்தி முகமை கையெழுத்திட முகமது எல் பராடி முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.