மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக புலனாய்வில் தெரியவந்துள்ள அபினவ் பாரத் அமைப்பிற்கு நிதி உதவி செய்த நிறுவனங்கள் குறித்து அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மாலேகான் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் துறவி, கான்பூரில் கைது செய்யப்பட்ட துறவி தயானந்த் பாண்டே, இந்திய இராணுவத்தில் பணியாற்றிவரும் லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட்ட அனைவரும் அபினவ் பாரத் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளதை மராட்டிய மாநில காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்த அமைப்பிற்கு தேவையான நிதியை தெற்கு குஜராத்தில் உள்ள சில துறவிகள் மூலம் மராட்டிய, குஜராத் மாநிலத்தி்ல் இயங்கிவரும் பல நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருப்பதை பயங்கரவாத தடுப்புப் பிரிவும், மத்திய பாதுகாப்பு அமைப்பும் கண்டுபிடித்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அபினவ் பாரத் என்ற இந்த காவி அமைப்பிற்கு நிதி உதவி செய்த நிறுவனங்களிடம் தாங்கள் விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களுக்கு தாங்கள் அளித்த நிதி எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் தெரிந்துதான் அவர்கள் உதவி செய்துள்ளார்களா என்று விசாரித்து வருவதாகவும், இதுவரை எவ்வளவு நிதி அந்த அமைப்பு வசூலித்துள்ளது என்பதை புலனாய்வு செய்து வருவதாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் 6ஆம் தேதி நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமுற்றனர்.