சத்தீஷ்கர் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் பரவியுள்ள 51 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.
காலை 8 மணி முதல் எல்லாத் தொகுதிகளிலும் ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இத்தேர்தலில் 687 வேட்பாளர்களின் தலைவிதியை 88,14,228 வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, அவரின் மனைவி ரேணு, பா.ஜ.க. மாநிலத் தலைவர் விஷ்ணுதேவ் சாய், காங்கிரஸ் மாநிலத் தலைவர் தனேந்திர சாகு, பேரவைத் துணைத் தலைவர் பத்ரிதர் திவான், உள்துறை அமைச்சர் ராம்விசார் நேடாம் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
பா.ஜ.க., பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் 51 இடங்களில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளிலும், அதனுடைய கூட்டாளி தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஷ்கரில் தேர்தலின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க மத்தியப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. முதல்கட்டத் தேர்தலில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரிசர்வ் படைக் காவலர் ஒருவரும், விமானப் படையைச் சேர்ந்த விமானப் பொறியாளரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு கடந்த 14 ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்ததது. இதில் சுமார் 53 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் தெரிவித்தன.
டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.