கேரளாவில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மத போதகர்கள் இரண்டு பேரை மத்தியப் புலனாய்வுக் கழகம் கைது செய்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பியஸ் Xth கான்வென்டில் உள்ள கிணற்றில் அபயா என்ற 16 வயது கன்னியாஸ்திரி கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிணமாக மிதந்தார்.
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அபயா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினர். பின்னர் நடத்தப்பட்ட தடவியல் ஆய்விலும், மத்தியப் புலனாய்வுக் கழக விசாரணையிலும் அபயா கற்பழித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், அபயா கொலையில் அவருடன் பணியாற்றிய மத போதகர்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்திருக்கயில், கன்னியாஸ்திரி செஃப்பி ஆகியோருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அவர்கள் மூவரிடமும் கடந்த ஆண்டு உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது.
இதனடிப்படையில் கோட்டயத்தில் நேற்று போதகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று எர்ணாகுளம் மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று ம.பு.க. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் கன்னியாஸ்திரி செஃப்பியும் கைது செய்யப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.