ஒரிசா மதக் கலவரங்களின்போது கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, அதற்குப் பின்னர் நடந்த கூட்டுக் கற்பழிப்பு முயற்சியிலிருந்து தன்னை இந்து ஒருவர் காப்பாற்றினார் என்று குற்றப் பிரிவு காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.
ஒரிசாவில் விஸ்வ இந்த பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்தா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த கலவரங்களின்போது, ஆகஸ்ட் 25 ஆம் தேதி பலிகுடா மாவட்டத்தில் உள்ள கே நெளகான் என்ற இடத்தில் 29 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரிடமும், இந்தச் சம்பவத்திற்கு உள்ள ஒரே சாட்சியான பாதிரியார் தாமஸ் செலானிடமும் புது டெல்லியில் குற்றப் பிரிவுக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, கே நெளகானில் தான் கற்பழிக்கப்பட்ட பிறகு உடனடியாக மேலும் இருவர் தன்னை மானபங்கப்படுத்தியதுடன் கற்பழிக்க முயன்றதாகவும், அப்போது உள்ளூர்வாசியான இந்து ஒருவர் சம்பந்தப்பட்டவர்களைத் தடுத்துத் தன்னைக் கூட்டுக் கற்பழிப்பில் இருந்து காப்பாற்றியதாகவும் கன்னியாஸ்திரி கூறியுள்ளார்.
மேலும், தன்னை முதலில் கற்பழித்தவரைத் தன்னால் சரியாக அடையாளம் காட்ட முடியும் என்று கூறிய கன்னியாஸ்திரி, பின்னர் தான் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டதால் மற்ற இரண்டு பேரை மிகச் சரியாக அடையாளம் காட்ட முடியாது என்று வருந்தியுள்ளார்.
கந்தமாலிற்கு மீண்டும் செல்வதைத் தான் விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், கந்தமாலைத் தவிர ஒரிசாவில் வேறு எங்கு வேண்டுமானாலும் அடையாள அணிவகுப்பிற்கு குற்றப் பிரிவு காவலர்கள் ஏற்பாடு செய்தால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
கன்னியாதிரியிடமும், பாதிரியாரிடமும் விசாரணை நடத்தப்பட்டதை குற்றப் பிரிவுக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் அருண் ராய் உறுதி செய்துள்ளார்.