கர்நாடகாவில் புகழ்பெற்ற கோயில் நகரமான ஹொரநாடு அருகில் நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகளும் நக்சலைட் தடுப்புப் படை காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஹொரநாடு அருகில் மாவினஹோலா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து நக்சலைட் தடுப்புப் படையினர் நேற்றிரவு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கலாசா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, பெண் ஒருவர் உட்பட 4 நக்சலைட்டுகள் காவலர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து நக்சலைட் தடுப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை 4.30 மணி வரை இரண்டு தரப்பினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 3 நக்சலைட்டுகளும் குரு பிரசாத் என்ற காவலரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பெண் நக்சலைட்டு இருட்டைப் பயன்படுத்தி வனப்பகுதிக்குள் தப்பிவிட்டார்.
இந்தத் தகவலை தொலைபேசியில் பி.டி.ஐ. நிறுவனத்திடம் தெரிவித்துள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைமை ஆய்வாளர் ஏ.எம்.பிரசாத், சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.