Publish Date: Wed, 19 Nov 2008 (12:11 IST)
Updated Date: Wed, 19 Nov 2008 (12:11 IST)
சிறையிலும், தலைமறைவாகவும் இருக்கும் பல்வேறு நிழலுக தாதாக்களுடன் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்திற்கு தொடர்பு இருக்கக் கூடும் என்று மும்பை காவல் துறையினர் கூறியுள்ளனர்.
நமது நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று மும்பை காவல் படையினர் கூறியுள்ளனர்.
நிதி மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பஸ்லூர் ரகுமான் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும், இஸ்லாமிய இயக்கம் ஒன்றிற்கு கொடுப்பதற்காக அவர்கள் நிதி திரட்டியதும் தெரிய வந்துள்ளது.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் பஸ்லூர் ரகுமானிற்கும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான ரியாஸ் பட்காலிற்கும் தொடர்பிருப்பதாக ஏற்கெனவே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மும்பை காவல் படையினர் மேலும் விரிவாக விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.