மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 91ஆவது பிறந்தாளையொட்டி, நாடு முழுவதும் தலைவர்கள் பலர் அவரது நினைவிடத்திலும், உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திரா பிறந்த நாள், தேசிய ஒருமைப்பாட்டு வார துவக்க நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. வரும் 25ஆம் தேதி நிறைவு நாளன்று கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார்.
இந்த வாரம் முழுவதும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொதுக்கூட்டம், கருத்தரங்கு, சிறப்பு இலக்கிய விழாக்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதி, பேதமற்ற சமாதானம், தேசிய ஒருமைப்பாட்டு தகவல்கள் மக்களை சென்றடையச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் இந்திரா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிர்வாகிகள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.