ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 15 கிலோ ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட ஏராளமான பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலைச் சீர்குலைக்கப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சிக்கக்கூடும் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோடா மாவட்டத்தில் உதியான்பூர் என்ற இடத்தில் ரகசியத் தகவலின் பேரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து 15 கிலோ ஆர்.டி.எக்ஸ்., ஒரு கையெறி குண்டு, 148 சுற்று ஏ.கே. துப்பாக்கித் தோட்டாக்கள், 18 சுற்று 303 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையில், ரியாசி மாவட்டத்தில் சாசனா என்ற பகுதியில் ராஷ்ட்ரிய ரைஃபிள் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 10 கிலோ எடையுள்ள வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.