ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் நடந்த மதக் கலவரங்களின்போது சேதப்படுத்தப்பட்ட தேவாலயங்களைப் புதுப்பித்துத் தர அம்மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒரிசா மாநிலப் பொதுச் செயலர் கெளரி பிரசாத் ராத் கூறுகையில், "கிறித்தவர்கள் நடத்தும் பயிற்சி கூடங்களும் தேவாலயங்களும் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. கிறித்தவ மதத்தை வளர்க்க மக்களின் வரிப்பணத்தைச் செலவழிக்க அரசிற்கு உரிமை இல்லை" என்றார்.
"கந்தமாலில் மத நல்லிணக்கத்தை மீட்டமைக்க வேண்டும் என்று அரசு விரும்புமானால், கிறித்தவர்களின் மறுகட்டுமானப் பணிகளுக்கு நிதி வழங்குவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், "இதுபோன்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யுமாறு மட்டுமே நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மாநில அரசுதான் நீதிமன்ற உத்தரவைத் தவறாகப் பயன்படுத்துகிறது" என்று கெளரி பிரசாத் ராத் குற்றம்சாற்றினார்.
கலவரத்தில் முழுமையாக அழிக்கப்பட்ட தேவாலயங்கள், கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.2,00,000மும், பகுதி அழிக்கப்பட்டவைக்கு ரூ.1,00,000மும், முழுமையாக அழிக்கப்பட்ட வழிபாட்டுக் கூடங்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று ஒரிசா அரசு அண்மையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.