நிலவிற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமான சந்திரயான்-2 திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது.
இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான்-1 நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக உள்ளதென விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நமது இரண்டாவது ஆளில்லா விண்கலமான சந்திரயான்-2 ஐ 2012 இல் நிலவிற்கு அனுப்புவோம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்திரயான்-2 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரயான்- 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
சந்திரயான்-2 திட்டப் பணிகளை இஸ்ரோ ஏற்கெனவே துவங்கிவிட்டதாகவும், இந்தத் திட்டம் முழுவதும் இந்தியத் தயாரிப்பாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.