இந்தியா- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்கள் இடையில் நவம்பர் 25 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள பேச்சில் பயங்கரவாதத்தை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப் பொருள் கடத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவற்றை முறிடித்தல் குறித்தும், குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறுதல் குறித்தும் இந்தப் பேச்சில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
இதுகுறித்து தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவை என்பதால், அதை முறியடிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது அவசியம்" என்றார்.
மேலும், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான நிழலுக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், 1999 இல் ஐ.சி. 184 விமானத்தைக் கடத்திய 5 கடத்தல்காரர்கள் ஆகியோரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வருகிறது. ஆனால் இவர்கள் தங்களிடத்தில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.