காஷ்மீரில் முதற்கட்ட தேர்தல் நடந்து வரும் 10 தொகுதிகளில் லெஹ், கார்கிலில் வாக்குப்பதிவு உற்சாகமாக நடந்து வருகிறது.
காலை வாக்குப்பதிவு துவங்கிய ஒருசில நிமிடங்களிலேயே கார்கிலின் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் 77 வாக்குகள் பதிவானது. இதேபோல் கார்கில் உயர்நிலைப் பள்ளியில் 65 வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கில் வாக்குப்பதிவை விட லெஹ் பகுதியில் வாக்குப்பதிவு சற்றே குறைவாகக் காணப்பட்டாலும், இதர பகுதிகளை விட அங்கு வாக்காளர்கள் அதிகளவில் காணப்பட்டனர். காலை 8 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கினாலும், லெஹ் பகுதி வாக்குச்சாவடிகளுக்கு சுமார் 8.30 மணியளவிலேயே வாக்காளர்கள் வந்தனர். சன்ஸ்கர், நோப்ரா ஆகிய பகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகின்றது.
காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரம்: முதற்கட்ட தேர்தலை முன்னிட்டு காஷ்மீரில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழல் காணப்பட்டது.
பிரிவினைவாத அமைப்புகள் பேரணி நடத்தி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்பதால் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் இதர பள்ளத்தாக்குப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாகவும், பிரிவினைவாத அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.