சந்திரயான்- 1 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைந்துள்ளதன் மூலம் விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவும் ஒரு தனி இடத்தைப் பதிக்கும் என்ற செய்தி உலக அரங்கிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சந்திரயான்-1 விண்கலத்தின் மூலம் மூன் இம்பாக்ட் புரோப் கருவியை (Moon Impact Probe) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கியுள்ளதால், எதிர்காலத்தில் கிரகங்களுக்கு இடையிலான பயணத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) ஏற்பட்டுள்ளது.
விண்வெளி வர்த்தகத்தில் இந்தியாவிற்கு ஒரு தனியிடம் உள்ளது என்ற செய்தியை உலக அரங்கிற்கு தெரியப்படுத்தும் நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. இனி எந்தக் கிரகத்திற்கும் நமது பயணத்தை நம்பிக்கையுடன் மேற்கொள்வோம். விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிப்போம்." என்றார்.
"சந்திரயான்-1இன் வெற்றிப் பயணம், மூன் இம்பாக்ட் புரோப் கருவி நிலவில் தரையிறங்கியது ஆகிய நிகழ்வுகளுக்கு தேசம் தெரிவித்த வாழ்த்துக்கள் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இஸ்ரோவின் புகழ் என்றும் ஓங்கியே உள்ளது. இது மேலும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கடந்த காலத்தில் இருந்ததைவிட நாங்கள் மிகுந்த மரியாதையுடன் உள்ளோம் என்று சர்வதேசச் சமூகத்திற்கு உறுதியளிக்கிறோம்." என்றும் அவர் கூறினார்.