Publish Date: Sat, 15 Nov 2008 (22:43 IST)
Updated Date: Sat, 15 Nov 2008 (22:43 IST)
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு 20க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புது டெல்லியில் உள்ள இராமலீலா திடலில் நேற்று நடந்த இப்பேரணிக்கு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவர் உமன் ஜீனு ஜக்காரியா தலைமையேற்றார்.
இனப் படுகொலையை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பேரணி வந்த மாணவர்கள், நாடாளுமன்ற வளாகத்திற்குச் சற்று முன்பு இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மகளிர் சங்க செயலாளர் ஆனிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.