ஒரிசா மாநிலம் காந்தமாலில் சுட்டுக்கொல்லப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதில் மாநில அரசின் செயல்படாத நடவடிக்கையைக் கண்டித்து இன்று சங்பரிவார் அமைப்பு பேரணி நடத்துகிறது.
பேரணி நடத்தினால் மீண்டும் வகுப்பு கலவரம் ஏற்படும். அதனால் பேரணிக்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும், அதைக்கண்டுகொள்ளாத மாநில அரசு பேரணிக்கு அனுமதியளித்துள்ளது.
இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காந்தமாலில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமாணந்தா சரஸ்வதியும், அவரது உதவியாளர்களும் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் ஏராளமான கிறிஸ்தவர்களின் வீடுகளும், தேவாலயங்களும் தாக்கப்பட்டன. இரு பிரிவினரிடையே நடந்த இந்த மோதலில் 38 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.