Publish Date: Sat, 15 Nov 2008 (05:07 IST)
Updated Date: Sat, 15 Nov 2008 (05:07 IST)
ஒரிசாவில் சங் பரிவார், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி ஸ்ரதாஞ்சலி சமிதி ஆகியவை இணைந்து நடத்தும் ஊர்வலத்திற்கு மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இருந்தாலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில், முழக்கங்கள் எதுவும் எழுப்பாமல் ஊர்வலத்தை நடத்திக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரிசாவில் விஸ்வ இந்த பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்த மதக் கலவரங்களில் கந்தமால் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே லக்ஷ்மானந்தா சரஸ்வதிக்கு இரங்கல் ஊர்வலம் நடத்த இந்து அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், பதற்றம் தணியும் வரை ஒரிசாவில் எங்கும் இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
இதுபோன்ற ஊர்வலங்கள் சட்டம்- ஒழுங்கைக் குலைப்பதுடன், கந்தமாலில் அமைதி திரும்புவதையும் பாதிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க. வின் தொடர்ச்சியான வற்புறுத்தலை அடுத்து சங் பரிவார், சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி ஸ்ரதாஞ்சலி சமிதி ஆகியவை இணைந்து நடத்தும் ஊர்வலத்திற்கு ஒரிசா அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி இந்த அனுமதி தரப்பட்டு இருந்தாலும், முழக்கங்கள் எழுப்பக் கூடாது, சமூக அமைதியைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.