சத்தீஷ்கரில் முதல் கட்டத் தேர்தல் முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற இந்திய விமானப் படை ஹெலிகாப்டரின் மீது நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விமானப் பொறியாளர் ஒருவல் பலியானார்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்டத் தேர்தலில், மலைப்பாங்கான பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் தேர்தல் அதிகாரிகளையும் கொண்டு செல்ல இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பீடியா என்ற இடத்தில் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்களையும், தேர்தல் அதிகாரிகளையும் ஏற்றிக்கொண்டு எம்.ஐ -8 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அதில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சிலரும் பாதுகாப்பிற்காக இருந்தனர்.
இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே நக்சலைட்டுகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானது. இதில் விமானப் பொறியாளர் சார்ஜென்ட் முஸ்தபா அலி என்பவர் குண்டு பாய்ந்து பலியானார்.
இறக்கை, பின்புறத் தகடுகள் எனப் பல இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் ஹெலிகாப்டர் தொடர்ந்து பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் விமானி டி.கே.செளத்ரி சாமர்த்தியமாகச் செயல்பட்டு ஹெலிகாப்டரை ஜெகதலப்பூரில் தரையிறக்கினார் என்று விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.