நிலவில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சாதனைக்குப் பல்வேறு விஞ்ஞானிகளும் தலைவர்களும், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.
சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற மூன் இம்பாக்ட் புரோப் (Moon Impact Probe) கருவி வெள்ளிக்கிழமை இரவு 8.31 மணிளவில் நிலவின் தென் துருவத்தின் மேற்பகுதியில் மோதியதுடன், தேசியக் கொடியையும் பறக்கவிட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு குறித்துத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ள நமது நாட்டின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, பிற நாடுகளின் சாதனைகளை ஒப்பிட்டால் நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
பெங்களூருவில் இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்திரயான்-1 இன் செயல்பாடுகளைக் கண்டறிந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், நிலவின் மேற்பரப்பில் மூன் இம்பாக்ட் புரோப் கருவி மோதியிருப்பது இஸ்ரோவின் தொழில்நுட்பச் சிறப்பையும் படைப்புத் திறனையும் காட்டுகிறது என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், "இந்தத் தருணம் இந்தியாவின் வரலாற்றில் முக்கியமானது. உலகரங்கில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் நமது விஞ்ஞானிகள் சமூகத்திற்கு அவர்களின் அளப்பரிய முயற்சிகளுக்காக மரியாதை செலுத்துவோம்" என்றார்.
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், "இது உண்மையிலேயே இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். நிலம், நீர், ஆகாயம் என எல்லா இடங்களிலும் நமது அறிவியலும் தொழில்நுட்பமும் சாதிக்க வேண்டும்" என்றார்.