சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற மூன் இம்பாக்ட் புரோப் (Moon Impact Probe) எனப்படும் ஆய்வுக்கருவி வெற்றிகரமாக நிலவின் மேற்பகுதியை அடைந்து அங்கு நமது தேசியக் கொடியை பறக்கவிட்டது.நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் 119 ஆவது பிறந்த நாளான வெள்ளிக்கிழமை இந்தச் சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்- இஸ்ரோ செய்துள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் (PSLV) மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவை நோக்கி தொடர்ந்து நகர்த்தப்பட்டு, கடந்த 8ஆம் தேதி நிலவின் சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.தற்போது நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிவரும் சந்திராயன்-1 விண்கலத்தில் இருந்து மூன் இம்பாக்ட் புரோப் (Moon Impact Probe (MIP)) என்றழைக்கப்படும் நிலவில் மோதி இறங்கும் கருவி வெள்ளிக்கிழமை இரவு 8.06 மணியளவில் தனியாகப் பிரித்து அனுப்பப்பட்டது.
வினாடிக்கு 1.5 கிலோ மீட்டர் வேகத்தில் சரியாக 25 நிமிடப் பயணத்திற்குப் பிறகு 8.31 மணியளவில் இந்தக் கருவி நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் மோதி நமது தேசியக் கொடியைப் பறக்கவிட்டது.
இந்த ஆய்வுக்கருவியின் 4 பக்கங்களிலும் இந்தியாவின் மூவர்ணக்கொடி வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் ஏற்கெனவே அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ரஷ்யா உள்ளிட்ட 17 நாடுகள் தங்கள் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
மூன் இம்பாக்ட் புரோப் ஆய்வுக்கருவி 35 கிலோ எடையுள்ளது. 375 மி.மீ. நீளம், 375 மி.மீ. அகலம், 470 மி.மீ. உயரம் கொண்ட இந்தக் கருவியில் ராடார் அல்டி மீட்டர், ஒளிப்படக் கருவிகள், ஸ்பெக்டோ மீட்டர் கருவிகள் ஆகியவை உள்ளன.
இக்கருவி நிலவில் மோதி இறங்கும்போது எழும் தூசுப் பொருட்கள் படமெடுக்கப்பட்டு அனுப்படும், அது தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்- இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள பலவேறு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள 11 ஆய்வுக்கருவிகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்படத் துவங்கும் என்றும், இந்த ஆய்வுகள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.