சத்தீஷ்கரின் பஸ்டார் பகுதியில் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் திரிநாத் தாக்கூர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, முதற்கட்ட வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.
தன்டேவாடா பகுதியின் காங்கிரஸ் தலைவரான திரிநாத் தாக்கூரை மாவோயிஸ்ட்கள் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தன்டேவாடா காவல்துறை ஆய்வாளர் ராகுல் ஷர்மா இன்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் களவாடப்பட்டதால் தன்டேவாடா, கொன்டா மற்றும் 5 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்டார் ஆகிய தொகுதிகளில் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தேர்தல் நடைபெறும் 39 தொகுதிகளில், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கமுள்ள இடங்களில் காலை 7 மணிக்கும், பிற இடங்களில் காலை 8 மணிக்கும் வாக்குப்பதிவு துவங்கியது.
இதையடுத்து சுக்மா, கிஸ்தாராம், கொன்டா, பைரம்கார்ஹ், பக்கன்ஜூர், பிஜர்பூர், தன்டேவாடா, அந்தகார்ஹ் ஆகிய தொகுதிகளின் பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
துணை ராணுவப் படையினர் உட்பட, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 65,000 காவலர்களின் பாதுகாப்பையும் மீறி, 50 இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் சாலைகளை மாவோயிஸ்ட்கள் துண்டித்துள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாதபடி ராட்சத மரங்களை சாலையின் குறுக்கே வெட்டிச் சாய்த்துள்ளனர்.
இதன் காரணமாக தேர்தல் அலுவலர்கள் ஆகாய மார்க்கமாக வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. வேட்பாளரும் தற்போதைய முதல்வரான ராமன்சிங் போட்டியிடும் ரஜ்னன்கான் தொகுதியில், ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனக் கூறப்படுகிறது.
அம்மாநிலத்தில் மீதமுள்ள 51 தொகுதிகளுக்கு நவம்பர் 20ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.