முன்னாள் மத்திய அமைச்சரும், திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பாஞ்சா கொல்கட்டாவில் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.
புற்றுநோயால் அவதிப்பட்ட அஜித்பாஞ்சா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்றிரவு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாகவும், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அஜித்பாஞ்சாவின் மறைவுக்கு திருணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்களவை உறுப்பினராக 6 முறை பதவி வகித்த அஜித்பாஞ்சா, மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையிலும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.
மேற்கு வங்க மாநில அமைச்சரவையில் கடந்த 1971ஆம் ஆண்டிலும், 72ஆம் ஆண்டு முதல் 79ஆம் ஆண்டு வரையிலும் அஜித்பாஞ்சா அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.