சத்தீஷ்கர் மாநிலச் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் அமைதியாகத் துவங்கியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 39 இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் தன்டேவாடா மாவட்டத்தில் உள்ள பஸ்டார் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், துணை ராணுவப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 8 மணிக்கு துவங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. ஒரு சில இடங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் இருந்தது. எனினும் பஸ்டார் பகுதியில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு துவங்கிவிட்டது. இங்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதலமைச்சர் ராமன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, அவைத் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே, அமைச்சர்கள் ஹேமச்சந்த் யாதவ், லடா உசேண்டி, அஜய் சந்திராகர், கேதார் காஷ்யப் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
சத்தீஷ்கரில் வழக்கமாக பணியில் உள்ள காவலர்களைத் தவிர்த்து, நக்சலைட் எதிர்ப்புப் படையினர் 9,000 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையினர் 14,000 பேரும் பாதுகாப்புப் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்டார் உட்பட் 12 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.