மாலேகான் குண்டு வெடிப்புகள் தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் மராட்டியக் காவலர்கள் கூட்டு படையினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு கான்பூரில் பிடிபட்ட துறவி தயானந்த் பாண்டே முறைப்படி கைது செய்யப்பட்டார்.
இவர் இன்னும் மூன்று நாட்களுக்குள் நாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்துத் துறவி தயானந்த் பாண்டே உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைது செய்யப்பட்டார். இவர் ஜம்முவில் மடம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மற்றும் மராட்டிய காவலர்கள் கூட்டுப் படையினர் நடத்திய விசாரணைக்குப் பிறகு தயானந்த் பாண்டே வியாழக்கிழமை முறைப்படி கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர், லக்னோ நீதிமன்ற நீதிபதி முகேஷ் குமார் முன்பு நிறுத்தப்பட்டார். அப்போது தயானந்த் பாண்டேவை மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க காவலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து தயானந்த் பாண்டேவை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், மூன்று நாட்களுக்குள் அவரை நாசிக் நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.