சத்தீஷ்கர் மாநிலச் சட்டப் பேரவையில் உள்ள 90 இடங்களில் முதல் கட்டமாக 39 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் நடக்கவுள்ளது.
இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் என்பதால் வாக்குப்பதிவு நடக்கவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில முதல் அமைச்சர் ராமன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, அவைத் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே, அமைச்சர்கள் ஹேமச்சந்த் யாதவ், லடா உசேண்டி, அஜய் சந்திராகர், கேதார் காஷ்யப் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
தேர்தலை எதிர்த்து நக்சலைட்டுகள் நடத்தியுள்ள தாக்குதல்களில் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சத்தீஷ்கரில் வழக்கமாக பணியில் உள்ள காவலர்களைத் தவிர்த்து, நக்சலைட் எதிர்ப்புப் படையினர் 9,000 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையினர் 14,000 பேரும் பாதுகாப்புப் பணிக்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள 12 தொகுதிகளில் வாக்குப் பதிவு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.