கடல்வழிப் போக்குவரத்து, கடலின் வளங்களை சுரண்டப்படுவது ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த BIMSTEC நாடுகள் முன்வர வேண்டும் என வங்கக்கடல் வழி தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் பங்கேற்ற வங்கக்கடல் வழி தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று துவங்கியது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உற்பத்தி (GDP) 2.5 மடங்கு அதிகரித்து 1.7 டிரில்லியன் மதிப்பைத் தொட்டுள்ளது. பொது சுகாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் வங்கக்கடல் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானது என்றார்.
வங்கக்கடல் பகுதி நாடுகளுக்கு இடையில் தொழில்நுட்ப அளவில் ஒத்துழைப்பும், செயல்பாடும் அவசியம் என்பது மாநாட்டின் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.
நிதித்துறைக்கு பாதிப்பில்லை: வளர்ந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் BIMSTEC நாடுகளின் நிதித்துறைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அப்போது குறிப்பிட்டார்.
வளர்ந்த நாடுகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி, பொருளாதாரச் சரிவின் காரணமாக வளரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் வேண்டுமானால் குறையலாம் நிதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாது என்றார்.
இந்தியாவில் உள்ள வங்கிகளைப் பொறுத்த வரை அவை அனைத்து முறையாக பராமரிக்கப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை கொள்வது தேவையற்றுது என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.