Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலவை படமெடுக்கத் துவங்கியது சந்திரயான்-1

நிலவை படமெடுக்கத் துவங்கியது சந்திரயான்-1
, வியாழன், 13 நவம்பர் 2008 (13:38 IST)
நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் அதன் துருவ சுழற்சிப் பாதையில் சுற்றி வந்துக்கொண்டிருக்கும் சந்திரயான்-1 விண்கலம், நிலவின் மேற்பரப்பை படமெடுக்கத் துவங்கியுள்ளது!

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் (PSLV) மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், நிலவை நோக்கி தொடர்ந்து நகர்த்தப்பட்டு, கடந்த 8ஆம் தேதி நிலவின் சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ISROISRO

நிலவில் இருந்து 7,502 கி.மீ. நெடுந்தூரமும் (Aposelene), 200 கி.மீ. நெருங்கிய தூரமும் (Periselene) கொண்ட நீள்வட்ட சுழற்பாதையில் நிலவை சுற்றிக்கொண்டிருந்த சந்திரயானை, அதிலுள்ள 440 நியூட்டன் திரவ உந்து இயந்திரத்தை இயக்கி, முதற்கட்டமாக 255 கி.மீ. நெடுந்தூரமும், 182 கி.மீ. நெருங்கிய தூரமும் கொண்ட சுழற்சிப் பாதைக்கு கொண்டு வந்தனர்.

அதன் பிறகு நேற்று 255 கி.மீ. ஆக இருந்த நெடுந்தூரத்தை 100 கி.மீ. ஆகவும், 182 கி.மீ. ஆக இருந்த நெருங்கிய தூரத்தை 100 கி.மீ. ஆகவும் குறைத்து, சந்திரயானை நிலவின் துருவத்தை நோக்கிய சுழற்சிப் பாதையில் நிலை நிறுத்தினர். 16 நிமிட நேரம் உந்து இயந்திரத்தை இயக்கி இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். தற்பொழுது 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நிலவை சுற்றி வருகிறது சந்திரயான்-1.

திட்டமிட்டபடி, 100 கி.மீ. சுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்டடதும் சந்திரயானில் உள்ள Terrain Mapping Camera (TMC) எனும் நிலவின் பரப்பை படம் பிடிக்கும் புகைப்படக் கருவியும், Radiation Dose Monitor (RADOM) என்ற கருவியும் இயக்கி வைக்கப்பட்டன. இவைகள் நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பி வைக்கும். அந்தப் படங்களைக் கொண்டு நிலவிலுள்ள கனிம வளங்களை அறிய முடியும். யுரேனியம், தோரியம் ஆகியன மட்டுமின்றி, ஹீலியம் ஆகியவற்றின் இருப்புத் தொடர்பான ஆய்விற்கும் இப்படங்கள் உதவியாக இருக்கும்.

அடுத்த கட்டமாக, Moon Impact Probe (MIP) என்றழைக்கப்படும் நிலவில் மோதி இறங்கும் கருவி இறக்கப்படும். இது சந்திரயான் திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாகும். இக்கருவி நிலவில் மோதி இறங்கும்போது எழும் தூசுப் பொருட்கள் படமெடுக்கப்பட்டு அனுப்படும், அது தீவிர ஆய்விற்கு உட்படுத்தப்படும்.

அது இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முயற்சியிலேயே இந்திய வி்ண் வெளி ஆய்வு விஞ்ஞானிகள் சந்திரயான் விண்கலத்தை நிலவு சுழற்சிப் பாதயில் வெற்றிகரமாகவும், துல்லியமாகவும் செலுத்தியிருப்பது உலக அளவில் விண்ணியல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய சாதனையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil