இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்ச, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கையில் நிலவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
டெல்லியில் இன்று நடக்கவுள்ள வங்கக்கடல் வழி தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (BIMSTEC) பங்கேற்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு டெல்லி வந்த அதிபர் ராஜபக்சவை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது வரவேற்றார்.
BIMSTEC மாநாட்டின் இடையில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவுள்ள ராஜபக்ச, இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் சிறிலங்கா அரசின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவை குறித்துப் பேசவுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
இதற்கிடையில், இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது அந்நாட்டில் நிலவும் இனப்பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பது, சிறிலங்க கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் நடந்து வரும் போரை இலங்கை அரசு உடனடியாக நிறுத்துவதுடன், தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாகக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ச, இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்ததுடன், இந்நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.