இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான்-1 வெற்றிகரமாகத் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சந்திராயான்-1 தற்போது நிலவில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டு உள்ளது என்றும், இந்தத் தொலைவை 100 கிலோ மீட்டராகக் குறைக்கும் முயற்சிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ பேச்சாளர் எஸ்.சதீஷ் தெரிவித்தார்.
சந்திராயன்-1 விண்கலம் தற்போதுள்ள தொலைவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தப்படும். இந்தக் காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
"சந்திராயன்-1 நிலவின் சுற்றுப் பாதையை அடைந்ததும், நிலவில் இருந்து அது நிலைகொண்டுள்ள தூரம் 7,502 கிலோ மீட்டராக இருந்தது. இந்தத் தொலைவு 255 கிலோ மீட்டராகவும், பின்னர் 182 கிலோ மீட்டராகவும் குறைக்கப்பட்டது. இறுதியாக இதை 100 கிலோ மீட்டராக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன." என்று இஸ்ரோ கூறியுள்ளது.
சந்திராயன்- 1 விண்கலத்தை 102 கிலோ மீட்டருக்குக் கொண்டுவரும் முயற்சியின்போது அதிலுள்ள திரவ எரிபொருள் என்ஜின் 60 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இதுவரை அந்த என்ஜின் 10 முறை வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.