2050 இல் இந்தியா மக்கள் தொகை வளர்ச்சியில் சீனாவை முந்திவிடும் என்று ஐ.நா. மக்கள் தொகை நிதியம் கூறியுள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள 'உலக மக்கள் தொகை- 2008' அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விழுக்காடு 1.5 ஆக உள்ளது. இதனடிப்படையில் 2050 இல் இந்தியாவின் மக்கள் தொகை 165.8 கோடியாக இருக்கும். அப்போது சீனாவின் மக்கள் தொகை 140.8 கோடியாக இருக்கும். என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் பிறப்பு விகிதம் 2.78 விழுக்காடாகவும், சீனாவில் பிறப்பு விகிதம் 1.73 விழுக்காடாகவும் உள்ளது. சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.6 விழுக்காடாகும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது 16.7 கோடியாக உள்ள பாகிஸ்தான் மக்கள் தொகை 2050இல் 29.2 கோடியாக உயரும். அதுவே இலங்கையில் மக்கள் தொகை குறையும். தற்போது அங்கு 1.94 கோடியாக உள்ள மக்கள் தொகை 2050இல் 1.87 கோடியாகக் குறையும்.
ஆஃப்கானிஸ்தானில் தற்போது வளர்ச்சி விகிதம் 3.9 விழுக்காடாக உள்ளது. அதன்படி தற்போது 2.8 கோடியாக உள்ள மக்கள் தொகை 2050இல் 7.9 கோடியாக உயரும்.
போலந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், கொரியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும் மக்கள் தொகை குறையும்.
அமெரிக்காவின் மக்கள் தொகை தற்போதுள்ள 30.8 கோடியில் இருந்து 2050இல் 40.2 கோடியாக உயரும் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.