மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று விசாரணையில் தெரியவந்த தயானந்த் பாண்டே என்ற துறவி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் இருந்து நேற்றிரவு உத்தரப்பிரதேசம் சென்ற பயங்கரவாத தடுப்பு படையின் ஒரு பிரிவினர், கான்பூரில் இன்று தயானந்த் பாண்டேவைக் கைது செய்தனர். இவர் ஜம்முவில் மடம் நடத்தி வருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்புக்கு ஹிந்து மதத் தலைவர்களை தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தயானந்த் பாண்டேவை பயங்கரவாத தடுப்புப் படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பஜ்ரங்தள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஷர்மாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, கைது செய்யப்பட்டுள்ள தயானந்த் பாண்டேவுக்கும் பஜ்ரங்தள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரை யாரென்றே எனக்குத் தெரியாது. மேலும் அவர் கட்சியின் உறுப்பினரும் அல்ல என பதிலளித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூரில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் பூபேந்தர் சிங், ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். வெடிகுண்டுகளை தயாரிக்கும் போது அது எதிர்பாராமல் வெடித்து அவர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். அவர்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தில் வெடித்த குண்டும், மாலேகானில் வெடித்த குண்டும் ஒரே தன்மையானவை என்று தடயவியல் துறையினர் உறுதி செய்தததையடுத்து இரு குண்டுவெடிப்புகளிலும் தொடர்புடையவர்களுக்கு உள்ள தொடர்பை உறுதி செய்வதில் மராட்டிய, உ.பி. காவல் துறைகளின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்படித்தக்கது.