நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் கே-15 ரக ஏவுகணையை, இன்று முதன் முறையாக தரையில் இருந்து ஏவி இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
ஒரிஸா கடலோரப் பகுதியில் உள்ள பாலாசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை பரிசோதனை மையத்தில் இன்று முற்பகல் 11.26 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10.2 மீட்டர் நீளமுள்ள, 700 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்த கே-15 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக கூறப்பட்டுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ஏவுகணையை தரைப்பகுதியிலும் பயன்படுத்த முடியும் என்பதை இந்த சோதனை உணர்த்தியுள்ளது.
இந்த வகை ஏவுகணை இதுவரை 2 முறை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் முதன்முறையாக நிலப்பகுதியில் இருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.