சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தனது பயணத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவுள்ள மகிந்த ராஜபக்ச, இலங்கையில் தமிழர்களைப் பாதுகாப்பதற்குத் தனது அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் வியாழக்கிழமை நடக்கவுள்ள வங்கக் கடல் வழி தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (BIMSTEC) பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா வந்துள்ளார்.
செவ்வாய்கிழமை நள்ளிரவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது வரவேற்றார்.
இலங்கையில் ராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரித் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகிந்த ராஜபக்சவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
BIMSTEC மாநாட்டின் இடையில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவுள்ள ராஜபக்ச, இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் சிறிலங்கா அரசின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவை குறித்துப் பேசவுள்ளார் என்று கருதப்படுகிறது.
மேலும், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் பாதிக்கப்படும் தமிழர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ராஜபக்ச விளக்கவுள்ளார்.
முன்னதாகக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்ததுடன், இந்த நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.