'அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை 2015க்குள் நேர்மையாக உழைத்து எட்ட வேண்டும்' என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டுத் தலைநகர் டெல்லியில் நடந்த தேசியக் கல்வி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசியதாவது:
கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தி கல்வியின் தரத்தை உயர்த்துவதே தேசிய கல்வி தினத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வி பயிற்றுவிக்கும் முறைகள், ஆசிரியர்களுக்கான பயிற்சியை மேம்படுத்துவது, பாலின சமத்துவம் உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றில் நமது கல்வி முறை கவனம் செலுத்த வேண்டும்.
அறிவார்த்தமும், உயர் தொழில்நுட்பமும் ஆட்சி செய்யும் இன்றைய உலகில், மனிதவளத்தை உருவாக்குவது நமது கல்வி முறையின் முன்னுள்ள உண்மையான சவாலாகும். அதிவேகமான மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளும் தன்மை கல்வி முறைக்கு வேண்டும்.
ஆரம்பக் கல்வியை பெண்களுக்கு அளிக்கும் தேசிய திட்டம், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா திட்டம், ஆரம்பக் கல்வி பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அனைவருக்கும் கல்வித் திட்டம் வாயிலாக, ஆறு முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இத்திட்டத்தின் வெற்றி தரமான கல்வியை அளிப்பதிலும் அடங்கியுள்ளது.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை 2015-ம் ஆண்டுக்குள் இந்தியா எட்டக் கூடிய வாய்ப்பிருப்பதாக யுனஸ்கோ அமைப்பின் உலக கண்காணிப்பு அறிக்கை 2008 தெரிவிக்கிறது. நேர்மையாக உழைத்து இந்த இலக்கை எட்டுவோம்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வலியுறுத்தினார்.