தேசிய நகர சுகாதாரக் கொள்கையை நவம்பர் 12 அன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
சுகாதாரக் கொள்கை பற்றிய விவரங்களை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலர் டாக்டர் எம் ராமச்சந்திரன் விளக்கமாக அறிவிப்பார் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நகர்ப்புற ஏழை மக்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதாரமான சூழ்நிலைகளை வழங்கவும், இந்திய நகரங்களை சுத்தமாக, ஆரோக்கியமானதாக மாற்றி சுகாதாரத்துடன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே இந்த தேசிய நகர சுகாதாரக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, நல்ல நடத்தை உருவாக்குவது, ஒருங்கிணைந்த நகர சுகாதாரம், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றுதல், அனைத்து சுகாதார அமைப்புகளை நல்லவிதமாக பராமரித்தல் ஆகியன அடங்கும்.
மேலும், சுகாதார நடவடிக்கை உத்திகளுக்கான மாநில அளவில் நிதியுதவி, நகர அளவிலான திட்டங்கள் மற்றும் விவரமான திட்ட அறிக்கை, பொது தனியார் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் திறமை வளர்த்தல் ஆகியவைகளும் இந்த கொள்கையின் முக்கிய அம்சங்களாகும் என்றும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.