மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். புரோஹித் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கும்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதற்கேற்றவாறு ராணுவக் கட்டுப்படுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் லெப்டினன்ட் கர்னல் புரோஹித் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து முதன்முறையாக கருத்துத் தெரிவித்துள்ள ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் புரோஹித் மீது ராணுவச் சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
புரோஹித் குற்றவாளி என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அப்படி இருந்தாலும் அது அவரது மனநல பாதிப்பாக இருக்கலாம் என்றார் அவர்.
மேலும், "இப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்காமல் தடுக்கும் வகையில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அதிகாரியின் விவரங்களும் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது." என்றும் ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்தார்.