Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!
, செவ்வாய், 11 நவம்பர் 2008 (16:21 IST)
மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை. 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil