பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பு நிற்கும்வரை, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்த பரிசீலனையை அரசு நிறுத்தி வைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் முதல்முறையாக சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மன்மோகன் சிங் தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பெட்ரோல் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டத் தொடங்கி விட்டதாகக் கூறிய அவர், டீசல் விற்பனையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைப்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பில்லாத நிலை உருவானால் விலைகுறைப்பு சரியான முடிவாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், மானியம் வழங்குவதற்கும் அரசுக்கு எல்லை உண்டு என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
வளைகுடா நாடுகளில் தமது சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்த நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் விற்பனை மூலம் லிட்டருக்கு ரூ. 4.12 லாபம் கிடைத்தபோதிலும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 96 காசுகள் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தவிர, இந்த நிதியாண்டில் எல்பிஜி, மண்ணெண்ணெய் மானியம் மூலமாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 135 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.