கத்தார், ஓமன் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், நேற்றிரவு புதுடெல்லி வந்தடைந்தார்.
நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக கத்தார், ஓமன் நாடுகளுக்கான 3 நாள் சுற்றுப்பயணத்தை (நவம்பர் 8-10) வெற்றிகரமாக முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணமும், அந்நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பும் ஆக்கப்பூர்வமானதாகவும், பலன் அளிக்கும் வகையிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டிற்கான பயணத்தின் போது, இருநாடுகளிடையே 100 மில்லியன் (ஒரு மில்லியன்=10 லட்சம்) டாலரை பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பான கையெழுத்தான ஒப்பந்தம் இப்பயணத்தின் மைல்கல்லாக கருதப்படுகிறது.
அதேபோல் அந்நாட்டில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான மற்றொரு ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாட்டுக்கான பயணத்தின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடல் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பான புலனாய்வு மற்றும் விசாரணைத் தகவல்கள் பரிமாற்றம், பண மோசடி, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுப்பதில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
இப்பயணத்தின் போது வெளிநாடு வாழ் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, அயலுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் பிரதமருடன் சென்றனர்.